தினம் ஒரு திருத்தலம் மூன்று கண்களைக் குறிக்கும்.. மூன்று தீபங்கள்.. அருவ வடிவ சிவன்..!! அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்…!! இந்த கோயில் எங்கு உள்ளது? புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிலோ மீட்டர். தொலைவில் ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. இந்த கோயிலின் சிறப்புகள், மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இதுவாகும். ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர். மற்ற கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. சூரிய, சந்திர கிரகணங்களின்போது மற்ற கோயில்களில் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகண நாட்களிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் ஆத்மநாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. வேறென்ன சிறப்பு? இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போன்ற கொடுங்கைகள் அதாவது தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பிகள் இணைக்கப்பட்டு, அதில் ஆணி அடிக்கப்பட்டது போல இவை காட்சியளிக்கின்றது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் காட்சியளிக்கிறாள். என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? ஆனித் திருமஞ்சனம் 10 நாட்கள்,மற்றும் மார்கழி திருவாதிரை, ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணி மூலம், முதலான நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை பாக்கியம், ஆகியவற்றுக்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்…!!
Previous