
அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க! என்னதான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. தங்கம் சிலருக்கு அழகினை ஒரு படி கூட்டும் ஆபரணமாக இருக்கிறது. ஆனால் பலருக்கு அது சேமிப்பு. அப்படி அடிக்கடி தங்கம் வாங்குவோருக்குத் தான் இந்தப் பதிவு. தங்க நகைகள் பெரும்பாலும் அதன் அழகிய வடிவமைப்பினால் தான் மக்களால் ஈர்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இதனாலேயே மக்கள் அதன் டிசைன்கள் மற்றும் அதன்மீது பதிக்கப்பட்ட கற்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு வாங்கி விடுகின்றனர். பொதுவாக தங்க நகைகள் அழகிய கற்களாலேயே அலங்கரிக்கப்படுகின்றன. அவ்வாறு கற்களால் வடிவமைக்கப்பட்ட நகைகளை வாங்கினால் மீண்டும் அதனை விற்கும் பொழுதோ அல்லது அடகு வைக்கும் பொழுதோ அதன் மீது பதிக்கப்பட்ட கற்களுக்கான மதிப்பு பூஜ்ஜியமாகும். அதாவது அந்த கற்களுக்கு மதிப்பு கிடையாது. இதனை நகை வாங்கும்பொழுது வாடிக்கையாளர்களுக்கு சில நகை கடை உரிமையாளர்கள் கூறிவிடுவர். அனால் பலர் தங்களின் லாபத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்ய மாட்டார்கள். எனவே தங்க நகை வாங்கும் நீங்கள், இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தங்க நகைகள் வாங்கும் பொழுது சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக நகை வாங்கும் இடமானது நமக்கு நன்கு தெரிந்த நம்பிக்கையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லை எனில் பாரம்பரியமாக நகை செய்யும் பொற்கொல்லரிடம் சென்று நகைகளை வாங்கலாம். மேலும் வண்ண வண்ண கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை தவிர்த்து விட்டு கற்கள் இல்லாத சாதாரணமாக வடிவமைக்கப்பட்டுள்ள நகைகளை வாங்குவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்கள் இல்லாத நகைகளை வாங்கும் பொழுது நகைகளின் மீதான மதிப்பு அப்படியே இருக்கும். தங்க நகைகள் பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு ஒரு பெரும் முதலீடாக இருப்பதால் நகை வாங்குவது நகைகளை சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயமாகும். அத்தகைய தங்க நகைகளை தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். அதோடு மட்டுமில்லாமல் சேதாரம் குறைவாக உள்ள தங்க நகைகளை வாங்க வேண்டும். நகையின் தரம், தங்கத்தில் கேரட் மதிப்பு எவ்வளவு உள்ளது என கவனித்து வாங்க வேண்டும். ஒரு கிராம் தங்கத்தின் விலை இவ்வளவு என்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவு என்றும் தெளிவாக தெரிந்து கொண்டு நகை வாங்க சென்றாலும் நகையின் விலையில் இருந்து சேதாரம் செய்கூலி என்று சொல்லி அதிகப்படியான பணத்தை நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டுதான் நகையை நம்மிடம் விற்கின்றனர். இதுபோல் இல்லாமல் சேதாரம் செய்கூலி இல்லாமலோ அல்லது சேதாரம் செய்கூலி குறைவாக உள்ள நகை கடையில் சென்று நகை வாங்குவது நல்லது. மேலும் நாம் வாங்குவது ஹால்மார்க் தங்க நகை தானா என்று உறுதி செய்து கொள்வது இன்னும் நல்லதாகும். ஏனெனில் நாம் வாங்கும் பொழுது இருந்த தங்கத்தின் மதிப்பு நாம் விற்கும் பொழுதோ அல்லது அடகு வைக்கும் பொழுதோ இருப்பதில்லை. இவ்வாறு நிகழும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு நகை வாங்கும் பொழுது மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கவனத்தில் வைத்துக்கொண்டு நகைகள் வாங்க வேண்டும்.