
தெய்வ நிலைக்கு உயர்த்தும் கல்யாண சடங்குகள்
முத்தான முப்பது சடங்குகள் பாகம் 1
ஒவ்வொரு மனிதனும், ஆணோ பெண்ணோ, இந்நிலவுலகில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து, தனக்குரிய அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்து, தன் புகழையும் சந்ததிகளையும் விட்டுச் செல்கிறான்.
அவன் வாழ்வு ஒவ்வொரு நிலையிலும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனும், அவன் சார்ந்த சமூகமும், அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும். அறம் தவறும் போது அத்தனையும் தவறும். இந்த அற வாழ்க்கை வாழத் துணை புரிவது கல்யாணம். கல்யாணத்தின் நோக்கம், மற்றும் செய்யும் முறைகள் பற்றிய சுவையான விளக்கங்களை “முத்தான முப்பது சடங்குகள்” என்று தொகுத்து வழங்குகின்றோம்.

- வாழ்வின் படி நிலைகள்
திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருட்பட்டு, மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனக் கூறலாம். கல்யாணத்தின் முக்கியமான நோக்கம் அற வாழ்க்கை வாழ்தலே. அதனால் தான் வள்ளுவர் போன்ற சான்றோர்கள் ‘‘இல்லறம்” என்று வகுத்தார்கள்.

@ மனிதன் தனித்து வாழ்ந்து, கல்வி கற்று, அறிவு பெரும் நிலை “பிரம்மச்சரியம்” என்பது.
@ அக் கல்வியில் கண்ட அறத்தோடு வாழ, தனக்குரிய துணையோடு இணைதலை “இல்லறம்” என்று சொன்னார்கள்.
@.சந்ததிகளை உருவாக்கி, அடுத்த தலைமுறையை, அறநெறி வாழ்வுக்குத் தகுதியானவர்களாக மாற்றி, வாழ்ந்து படிப்படியாக இல்லற பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து தன்னை விடுவித்துக் கொள்வதை “வானப் பிரஸ்தம்” என்றார்கள்.
@.முற்றிலுமாக விலகி, தன்னுடைய ஆன்ம கடைத்தேற்றம் நோக்கி நகர்தலை “சன்னியாசம்” என்றும் பிரித்து வைத்தனர்.
இந்த நான்கு படி நிலைகளில் ஒவ்வொன்றுக்கும், அதற்குரிய அறநெறிகள் உண்டு.