தினம் ஒரு திருத்தலம் மூன்று கண்களைக் குறிக்கும்.. மூன்று தீபங்கள்.. அருவ வடிவ சிவன்..!! அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்…!! இந்த கோயில் எங்கு உள்ளது? புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிலோ மீட்டர். தொலைவில் ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. இந்த கோயிலின் சிறப்புகள், மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இதுவாகும். ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர். மற்ற கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. சூரிய, சந்திர கிரகணங்களின்போது மற்ற கோயில்களில் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகண நாட்களிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் ஆத்மநாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. வேறென்ன சிறப்பு? இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போன்ற கொடுங்கைகள் அதாவது தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பிகள் இணைக்கப்பட்டு, அதில் ஆணி அடிக்கப்பட்டது போல இவை காட்சியளிக்கின்றது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் காட்சியளிக்கிறாள். என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? ஆனித் திருமஞ்சனம் 10 நாட்கள்,மற்றும் மார்கழி திருவாதிரை, ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணி மூலம், முதலான நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை பாக்கியம், ஆகியவற்றுக்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
மனக்கஷ்டம், பணக்கஷ்டம், நோய் உபாதைகள் நீக்கும் ஒரே தலம்

*அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி, புதுக்கோட்டை மாவட்டம்*. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில், அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள எட்டியத்தளியில் உள்ளது. அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம் இது. இவ்வாலயத்தில் சனி பகவானுக்கு ஒரு சந்நிதி கட்டப்பட்டது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார்.

மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் மற்ற ஆலயத்தில் நவக்கிரகங்களில் சனி பகவானும் இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் இருப்பர். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டால் சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறது. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறுகிறது.
செஞ்சடையப்பர் கோவில் – திருப்பனந்தாள்

செஞ்சடையப்பர் கோவில் – திருப்பனந்தாள் குங்குலியக்கலய நாயானர் ஈசனுக்கு சேவை செய்த தலம் பக்தருக்காக நிமிர்ந்த ஈசன் சிவலிங்கம் இறைவர் திருப்பெயர் : செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், அருணஜடேசுவரர் இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி தல மரம் : பனைமரம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் வழிபட்டோர் : தாடகை, குங்குலியக்கலய நாயானர் தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
https://youtube.com/channel/UCKdX7Z3Zr5A-9E6xMNc3xyg?si=PoL5EcHe4PIEETP4

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள் இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது. தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சிவஸ்தலம்.
https://youtube.com/channel/UCKdX7Z3Zr5A-9E6xMNc3xyg?si=qso8_0ehAAj5s6iD

இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன.கோவில் அமைப்பு:மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது.கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது.மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின்சந்நிதி இருக்கிறது.சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு.கும்பகோணம் – அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம்.
https://youtube.com/channel/UCKdX7Z3Zr5A-9E6xMNc3xyg?si=4P-YR8e-GvWokP6r
தேன் ஈயினால் பூஜிக்கப்பட்ட கோயில்

ஆலய தரிசனம், தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்… தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டுவந்தனர்.

அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று. கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் இதுவும் ஒன்று. தேனீஸ்வரர் கோயில். ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு ஆண் பெண் என இருமரங்கள் இருப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. மேலும் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணரமுடியும். சனி ராகு கேது தோஷ பரிகாரத்திற்கு திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலமாக விளங்குவதாகத் தெரிவிக்கின்றனர். சூரியன் வழிபாடு செய்வதால் திருமண தோஷம் நிவர்த்தியாகி இறையருளால் நடைபெறுகிறது. விநாயகருடன் வன்னிமரம் இருப்பதால் நவக்கிரக தோஷம் நிவர்த்தி ஆகிறது. கோயில் உள்ளே நுழைந்தவுடன் சுற்று சுவற்றை ஒட்டி இடதுபுறம் மேற்கு நோக்கிய நிலையில் மிகச் சிறிய சன்னிதியில் ஜோதிலிங்கேசர் வீற்றுள்ளார். இவரை வணங்கிய பின் தான் உள்ளே செல்ல முடியும். ராமலிங்க அடிகளார் வழிபட்ட லிங்கமாகும். கோவை உக்கடத்திலிருந்து பஸ் மூலம் வெள்ளலூர் நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்,.
அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில்,

அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தல வரலாறு: பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே, அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்’ என்றும் பெயர் பெற்றார்.

மயில் வடிவில் சிவன், அம்பாள் : இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, மயூரதாண்டவம் என்றும் சொல்கிறார்கள். இங்கு நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது. சேலை கட்டிய சிவன்: நாதசர்மா, அனவித்யாம்பிகை, எனும் தம்பதியர் ஐப்பசி கடைசிகட்ட துலா ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், உங்கள் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, முடவன் முழுக்கு என்கின்றனர்.அத்தம்பதியர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இவரது சன்னதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சற்றே இடப்புறம் சாய்ந்து, இடது காலை மடித்து வைத்தபடி காட்சி தருகிறார். ஆடிப்பூர அம்பாள் : தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், அபயாம்பிகை என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள்.ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள். பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, அகத்திய சந்தன விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

துலாஸ்நானம் : சிவன், இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தாராம். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் இடபதீர்த்தம் எனப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளிலும் இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில் தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்கிறார். கங்கை, இங்கு நீராடிதான் தன் பாவங்களை போக்கிக்கொண்டதாம். இந்நாள் ஐப்பசி அமாவாசையாக அதாவது தீபாவளியாக கருதப்படுகிறது. அன்று நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி சிறப்பு : இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் ஜுவாலை சனியாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும் என்பது நம்பிக்கை. ஐந்து பிரகாரங்களுடன் அமைந்த தலம் இது. இங்கு கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு. இங்குள்ள கணக்கடி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் கணக்குகளை சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சிறப்பம்சங்கள் :இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மாவட்டம் வாரியாக கோயில்கள் மற்றும் கடவுள்களின் வரலாறு, திருவிழாக்கள், கடவுள்களின் சிறப்புப் பெயர் மற்றும் அதன் காரணங்கள், குறிப்பிட்ட தோஷம் நீங்க எளிய வகை பரிகாரங்கள் மற்றும் அதன் பரிகார ஸ்தலங்கள், கோவில்களின் முகவரி மற்றும் வழி, கோவில் அமைந்துள்ள இடம், ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கோவில்கள் வரலாறு பற்றிய விரிவான விவரம் அறிய ஆன்மீகம் youtube channel லை subscribe செய்யவும் .
திட்டைக்கு வந்தால்… குரு பலம் நிச்சயம்…

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திட்டைக்கு வந்தால்… குரு பலம் நிச்சயம்… தஞ்சாவூர் மாவட்டம்.பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை. தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள். பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார். இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும்,துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம். அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர். அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார். தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப்படுபவராக உள்ளார்.தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை. ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள். அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ தலங்களில் 22 வது திருத்தலம் தென்குடித்திட்டை. தலம், தீர்த்தம், மூர்த்தம்… விசேஷங்கள்!பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்… இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.
கன்னி தெய்வம் வழிபாடு.

கன்னி தெய்வம் வழிபாடு. ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பதுதாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும், கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்பத்தை கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன். தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான். அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் தமிழர்களின் கன்னி வழிபாடு. ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மணம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது. இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது. பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை,ஈசான மூலை,என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன. தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர். குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும்.

ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும். இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள். அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர். கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது. துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம். குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும். இன்றைய நவீனயுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம். ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும். பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதுபோன்ற கன்னிகளுக்கும் அதுபோலதான் ஆசை. தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும்வரம் கொடுப்பார். இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடிர் திடிரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது. குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து. கன்னிகளில் கதை பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருக்குவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா… போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது. ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம். இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது. தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. நவீன யுகத்தில் கன்னி நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது. ஓம்நமசிவாய
விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், உலக இயக்கம் நின்றது.

கோவில்கள் வரலாறு அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “”விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,” என்றார். அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அப்படி தேவி பார்வதி தவம் செய்த அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் “அருந்தவநாயகி’ எனப்படுகிறாள். பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் இந்த பகுதி திருப்பழுவூர் என பெயர் பெற்றது.

சிறப்பம்சங்கள் : சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். இறைவன், இறைவி இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம், ஆகியவை உள்ளன. நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயிலை அடுத்து சிறிய கோபுரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து விநாயகர், கொடி மரம், பலி பீடம், நந்தி, ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் இடது புறமாக அருந்தவ நாயகி அம்மன் சன்னதி உள்ளது.

சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் வாயிலில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் உள்ளனர். வலப்புறம் இச்சா சக்தியின் அருகே விநாயகர் உள்ளார். அர்ந்த மண்டபத்தில் சந்திரன், சூரியன், 63 நாயன்மார்களின் உற்சவமூர்த்திகள்,திருமணகோலத்தில்மீனாட்சிசுந்தரேசுவரர், கங்காலமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இங்கு சிவகாமசுந்தரியுடன் நடராசர் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் முன்பாக நந்தி உள்ளது. மூலவர் உள்ள கருவறைக்கு வெளியே இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோட்டங்களில் கஜசம்காரமூர்த்தி, சபாபதி நடராசர், கமல கணபதி, தென்முக பரமன், அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரர், ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கருவறைத் திருச்சுற்றில் வலப்புறம் விநாயகர்,உமைமங்கைபாகன், காத்தீயாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர்,மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரவை மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி,பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, விநாயகர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். அடுத்து அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம் ஆகிய மூவரின் சன்னதிகள் உள்ளன. அதற்கடுத்து கஜலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.

இக்கோயிலின் வெளியே வலப்புறத்தில் சற்று தூரத்தில் இடிந்த நிலையிலான ஒரு சிறிய கோயில் காணப்படுகிறது. அக்கோயிலின் உள்ளே ஒரு லிங்கத் திருமேனி உள்ளது. வழிபாட்டில் இல்லாத நிலையிலும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. உள்ளே போகமுடியாத அளவு வௌவால்கள் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயில் அமைப்பிற்கு முன்பாக இரு நந்திகள் தரையில் பதிந்தவகையில் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயிலைச் சுற்றி வரும்போது பல சிற்பங்களைக் காணமுடிந்தது. குடமுழுக்கு 5 ஏப்ரல் 1974, 18 சூன் 2003 மற்றும் 10 திசம்பர் 2014 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்/தாயார்: அருந்தவ நாயகி தல விருட்சம்: ஆலமரம் தீர்த்தம்: பிரம, பரசுராம தீர்த்தம் ஆகமம்/பூஜை: சிவாகமம் புராண பெயர்: திருப்பழுவூர் ஊர்: கீழப்பழுவூர் மாவட்டம்: அரியலூர் மாநிலம்: தமிழ்நாடுமுகவரி: அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம். போன்: +91- 99438 82368 அமைவிடம்: அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்தேவாரப்பதிகம்கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர் மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம் திருவிழா:பங்குனி உத்திரம். பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். மேலப்பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
இந்த திருக்கோவில் வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும்

மாசிலாமணீஸ்வரர் கோவில் – வடதிருமுல்லைவாயில் செண்பக வனம் என்று அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது. இது கிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் என்று அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. அதுதான்வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர், என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி, என்பதாகும். தல மரம்: முல்லை கொடி தீர்த்தம் : கல்யாண தீர்த்தம். சுப்பிரமண்ய தீர்த்தம், வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார்,வள்ளலார்,முதலியோர்கள், இது தொண்டை நாட்டுத் தலம் ; வட திருமுல்லைவாயில் ஆகும்; சோழநாட்டில் – தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது என்பது வரலாறு தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான்.புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத்தூண்களும் போன்றவற்றை கொண்டு கோட்டை அமைத்து, பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர். இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும். இவர்களைக் காணத் தொண்டைமான் வந்தான்; வரும் வழியில் ‘சோழம்பேடு’ என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்று அறிந்து, மன்னன் மறுநாள் காலை யானை மீதேறி வந்தான். அவன் வருவதைக் கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டுவரத் திரும்பினான். அவ்வாறு திரும்பி இம்முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக்கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப் பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, “மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசு இல்லா மணியே! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிப் பெற்று வருவாயாக” என்று அருள்புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது என்கின்றனர்.) தொண்டைமான் (நந்தியம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர்.

இந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும். இறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது. என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது, அதேபோல் வெங்கலக்கதவும், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும், அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார்,ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு,ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர்,நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும், அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி,தட்சிணாமூர்த்தி,மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார். சென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ளமேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை, ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி,ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர் வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்த்து வரும் நாளில் மேலூரிலுள்ள ‘திருவுடையம்மனை’ காலையிலும், சென்னை திருவொற்றியூரிலுள்ள ‘வடிவுடை அம்மனை’ மத்தியத்திலும் வடதிருமுல்லை வாயில் ‘கொடியிடை நாயகி’ அம்மனை மாலையிலும் விரதமிருந்து வழிபட்டால் காசி ராமேஸ்வரம் சென்று வந்த பலனாகும்.

தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருவிழாகள் வைகாசி பிரமோற்சவம், மாசி தெப்பத் திருவிழா, ஆனியில் வசந்தோற்சவம், ஆகும்.இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விஜயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் , இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு. மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவியாரும், ஆகியசெம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத்திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் ஆட்சியில் பதினான்காம் நூற்றாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டுல் உள்ளது, அந்த மண்டபம் கட்டப் பட்டதையும் குறிப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக் கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் நூற்றாண்டு ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது. சிறப்பு அம்சங்கள் இத்தலத்து நந்தி இறைவனுடைய ஆணையை ஏற்றுக்கொண்டமையால் மன்னனுக்கு போருக்கு துணையாகச் சென்றதால் இறைவனை நோக்காது கிழக்கு முகமாக திரும்பி இருக்கும்.தொண்டை மான் மன்னனுக்கு இறைவன் அவசரக்காட்சி தந்தனால் சுவாமியும், அம்பாளும் இடமாறி இருப்பர் அதாவது எப்போதும் இடப்புறம் இருக்கும் அம்பாள் இந்த தலத்தில் வலது புறம் இருபாள் இருவருமே கிழக்கு நோக்கி இருப்பது மற்று மொரு சிறப்பு அம்சமாகும். திருவாரூரில் பிறக்க முக்தி,திருவண்ணாமலையை நினைக்க முக்தி, தில்லையை தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, என்பது வழக்கு. இத் தலத்தைப் பற்றி கேட்டாலே முக்தியாகும்,வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்த்து வரும் நாளில் மேலூரிலுள்ள ‘திருவுடையம்மனை’ காலையிலும், சென்னை திருவொற்றியூரிலுள்ள ‘வடிவுடை அம்மனை’ மத்தியத்திலும் வடதிருமுல்லை வாயில் ‘கொடியிடை நாயகி’ அம்மனை மாலையிலும் விரதமிருந்து வழிபட்டால் காசி ராமேஸ்வரம் சென்று வந்த பலன்கள் உண்டாகும். ஸ்ரீ பைரவர், சூரியன், நக்ஷத்தி ரங்கள், நவக்கிரகங்கள், வீரபத்திரர், இவர்களுக்கு இவ்வாலயத்தில் தனி வழிபாடு கிடையாது. ஏனெனில் சூரியன் பைரவர், நக்ஷத்திரங்கள், வீரபத்திரர், நவக்கிரகங்கள், அனைவரும் தம்வினை நீங்க இத்தலத்து பெருமானை வழிபட்ட காரணத்தால் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது. அனைவரும் இறைவனிடம்-ஐக்கிய மாவர். அமைவிடம் மாநிலம்: தமிழ் நாடு சென்னை – ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை அடைந்து 1-கி. மீ. சென்று கோயிலை அடையலாம். மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது.
தொடர்பு :044 – 26376151
=திருச்சிற்றம்பலம்=